1008 சங்காபிசேகம்|1008 Sangu abisegam.15-07-2021

1008 சங்காபிசேகம்|1008 Sangu abisegam|சங்கு வழிபாடு\சங்காபிஷேகம் என்பதின் ரகசியம் என்ன..

இறைவன் தன் அருளால் மனிதனை வயப்படுத்துகிறான்; மனிதனும் தன் பக்தியால் இறைவனைக் கட்டுப்படுத்துகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்றுதான் சங்காபிஷேகம். சிவன் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால், இந்த கங்கை சடைமுடியான், பக்தனுக்குப் பரமானந்தம் வழங்குவார். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குருக்ஷேத்ரமே நடுங்கியது. அபிஷேகத்திற்கு சங்கைப் பயன்படுத்துவானேன் என்று கேட்கலாம். சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தருவது. மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். அவரவர் வசதிப்படி 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்கிற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது. *‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹி தந்ந சங்க ப்ரேசோதயாத்’* கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.